ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி 30 பயணிகளுடன் வந்துக்கொண்டிருந்த அரசு பேருந்து இன்று 12 மணி அளவில் உத்தமசோழபுரம் பகுதியில் பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த சரக்கு வாகனத்தின் மீதும், அதைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் வந்த குழந்தை மற்றும் இருசக்கர வாகத்தில் பயணித்தவர்கள் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்தது. விபத்தில் உயிரிழந்த அமுதா, செல்வராஜ், மணிகண்டன், நிதிஷ்கா(5), 11 மாத குழந்தை ஜீவிகா, இருசாயி, முருகன், சத்யா என 8 பேரின் விபரங்கள் வெளியாகியுள்ளது.

மேலும், பேருந்தில் பயணம் செய்த 30 பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த கொண்டலாம்பட்டி போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version