தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான ஆனந்த், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்து முருகப்பெருமானை வழிபட்டார்.
கோவில் வளாகத்திற்கு வருகை தந்த அமைச்சர், பேட்டரி கார் மூலம் சண்முகவிலாசம் மண்டபம் வரை சென்றடைந்தார். இதன் தொடர்ச்சியாக, கோவில் கடற்கரை பகுதிக்குச் சென்ற அமைச்சர் ஆனந்த், அங்கு கடல் நீரில் புனித நீராடி, கடலில் தீர்த்தம் தெளித்து தனது வழிபட்டார். அங்கிருந்து கோவில் நடைக்குள் சென்ற அவர், மூலவர் சன்னதியில் சிறப்பு அர்ச்சனை செய்து நெய் விளக்கேற்றி வழிபட்டார்.
இதனைத் தொடர்ந்து, கோவிலின் முக்கிய சன்னதிகளான தட்சிணாமூர்த்தி, சண்முகர், பெருமாள், வள்ளி-தெய்வானை மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய சன்னதிகளுக்குச் சென்ற அமைச்சர், அங்குள்ள தெய்வங்களை வழிபட்டதோடு, சிறப்பு பூஜைகளையும் மேற்கொண்டார்.
இந்த ஆன்மீகப் பயணத்தின்போது, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவும் உடன் இருந்து சுவாமி தரிசனம் செய்தார். அமைச்சர் வருகையை முன்னிட்டு கோவில் வளாகத்தில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

