கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடந்த, முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரூ.24,307 கோடி முதலீட்டில் 49,353 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், 92 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து, முதல்வர் ரூ.250 கோடி முதலீட்டில் 1,100 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 3 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும் ரூ.1,210 கோடி முதலீட்டில் 7,900 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 4 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் 4 நிறுவனங்களின் பல்வேறு பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, ஜெர்மனி லண்டன் பயணத்தின் மூலம் ரூ.15,516 கோடி முதலீடுகளுடன் தமிழகத்திற்கு திரும்பினேன். அடுத்த 3 நாட்களில் ஓசூரில் இன்று ( நேற்று) நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.24,307 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. நம்முடைய சாதனையை நாம் தான் முறியடிக்கிறோம். ஓசூர் திறமையும் புதுமையும் சந்திக்கும் நகரமாக திகழ்கிறது.

தமிழகத்தின் வரைப்படத்தில் தனித்த அடையாளத்தை பெற்ற நகரம் ஓசூர். வளர்ச்சியின் மூலம் இந்தியாவை கடந்து, உலகளவில் கவனத்தை ஈர்க்கும் நகரமாக ஓசூர் ஒளி வீசுகிறது. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன், நாங்கள் 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார வளர்ச்சி அடைய வேண்டும் என இலக்கு நிர்ணயத்தோம். மாநில பொருளாதார வளர்ச்சியடைய வேண்டும் என்றால், தொழில் வளர்ச்சி தான் அடிப்படை. அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி மேம்படுத்தி, தொழில் செய்யும் சூழலை வலுப்படுத்துகிறோம். அதனால் தான் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதம் விழுக்காடு தொட்டிருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும், தமிழ்நாட்டை பற்றி தெரிந்து கொண்டு முதலீட்டாளர்கள் ஆர்வமாக வருகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 77 சதவீதம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழக இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும் என்பதே குறிக்கோள்.

கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு பெரும் தொழில் முன்னேற்றம், வளர்ச்சியை ஓசூர் பார்த்து வருகிறது. இதனால் ஓசூரை நோக்கி தொழிற்சாலைகள் சாரை சாரையாக வந்து கொண்டிக்கிறது. இ-ஸ்கூட்டர் உற்பத்தியின் தலைநகராகவும் ஓசூர் தான் இருக்கிறது. ஸ்டாலின் என்கிற பெயருக்கு மேன் ஆப் ஸ்டீல்’ என பொருள் உறுதியோடுசொல்கிறேன். எஃகு போன்ற உறுதியுடன் என்னுடைய இலக்குகளில் வெற்றிபெறுவேன். முதலீடு செய்ய வந்திருக்கும் உங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை நிச்சயமாக நாங்கள் வழங்க காத்திருக்கிறோம். தமிழகத்துடன் இணைந்து பயணம் செய்தால் வெற்றி நிச்சயம். எனவே, உங்கள் முதலீடுகளை எப்போதும், தமிழ்நாட்டிலேயே மேற்கொள்ளுங்கள்.

எம்எஸ்எம் துறை சார்பில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், வருகிற அக்டோபர் 9 மற்றும் 10-ம் தேதிகளில். கோயம்புத்தூரில் ஒரு உலக புத்தொழில் மாநாட்டை நடத்த இருக்கிறது. இந்த மாநாடு உலகம் முழுவதுமிருந்து தொழில்முனைவோர் முதலீட்டாளர்கள் இன்குபேட்டர்கள்,புத்தொழில் முனைவோர் ஆகியோரை ஒருங்கிணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும். ஸ்டார்ட்-அப்செக்டாரில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்தமாநாடு உலகிற்கு பறைசாற்றும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்நிகழ்வில், அமைச்சர்கள் சக்கரபாணி, டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து விஸ்வநாதபுரத்தில் உள்ள எல்காட் தொழில்பூங்காவில் அசென்ட் சர்க்யூட்ஸ் நிறுவனம் ரூ.1100 கோடி முதலீட்டில் 1200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர்.

Share.
Leave A Reply

Exit mobile version