தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக டிஜிபியாக பதவி வகித்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஓய்வு பெற்றதை அடுத்து, பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரும், வழக்கறிஞருமான ஆர் வரதராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பதவியில் இருக்கும் டிஜிபி ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன் டிஜிபி அந்தஸ்தில் உள்ள தகுதியான அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்ப வேண்டும். அந்தப் பட்டியலில் இருந்து மூன்று அதிகாரிகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்து மாநில அரசுக்கு அனுப்பி வைக்கும். அந்த மூன்று பேரில் ஒருவரை மாநில அரசு டிஜிபியாக நியமித்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால், உரிய நேரத்தில் அதிகாரிகள் பட்டியலை அனுப்பாத தமிழக அரசு, டிஜிபி பதவிக்கு தகுதியானவர்கள் பட்டியலை அரசுக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பில், நிர்வாகப் பிரிவு டிஜிபி-யாக இருந்த வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக நியமித்துள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது சந்தேகத்தை எழுப்பி உள்ளதால், பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து, டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடைமுறைகளை துவங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், அதுவரை மூத்த அதிகாரிகளில் ஒருவரை டிஜிபி பொறுப்பை கவனிக்கும்படி உத்தரவிட வேண்டும் எனவும் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பதவி வகிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு ப்ளீடர், எட்வின் பிரபாகர், இதே போன்ற ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தாக்கல் செய்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார். டிஜிபி பொறுப்பு காலியாக இருந்த நிலையில் இடைக்காலமாக பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டிருக்கிறார். அதனை எதிர்த்து பொதுநல மனு தாக்கல் செய்ய முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் தாங்கள் தலையிட விரும்பவில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.