பழங்குடியினர் சான்று பெற தகுதியுள்ள மாவட்டங்களின் பட்டியலில் இடம்பெறாத நிலையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மலையாளிகள் சமூகத்தினருக்கு பழங்குடியினர் சாதிச் சான்று வழங்கியது எப்படி என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழங்குடியினர் சாதிச் சான்று வழங்கக் கோரிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மலையாளி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மலையாளி சமூகத்தினர் 14 பேருக்கு பழங்குடியினர் சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும், ஈரோட்டைச் சேர்ந்த மலையாளி சமுதாயத்தினருக்கும் பழங்குடியினர் சான்று வழங்கும் வகையில் பட்டியலில் சேர்க்க தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், தர்மபுரி, வட ஆற்காடு, தென் ஆற்காடு, புதுக்கோட்டை, சேலம், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மலையாளி சமுதாயத்தினருக்கு மட்டும் பழங்குடியினர் சான்று பெற தகுதி உள்ளதாகவும், இந்த மாவட்டங்கள் மட்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், மாநில அரசின் பரிந்துரை மட்டும் போதாது; குடியரசு தலஇவர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் எனத் தெரிவித்தனர்.
பழங்குடியினர் சான்று பெற தகுதியுள்ள மாவட்டங்களின் பட்டியலில் இடம்பெறாத நிலையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மலையாளிகள் சமூகத்தினருக்கு எந்த அடிப்படையில் பழங்குடியினர் சாதிச் சான்று வழங்கப்பட்டது என நான்கு வாரங்களில் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.