தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பட்டாளம்மன்,ஸ்ரீ முத்தையா கோவில் உள்ளது. இந்த ஊரில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக இணைந்து இத்தனை ஆண்டுகளாக திருவிழா கொண்டாடி வந்தனர்.
திருவிழா நடைபெறும்போது குறிப்பிட்ட இரண்டு சமுதாய மக்களிடையே தொடர்ந்து பிரச்சனை எழுந்து வந்தது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலை இந்துசமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அப்போது முதல் கோவில் திருவிழா நடத்தப்படாமலேயே காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. மேலும் குடமுழுக்கும் நடைபெறவில்லை.
இந்த நிலையில் கோவில் திருவிழாவை நடத்த வேண்டும் என்றும், கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து இந்தக் கோவிலில் கும்பாபிஷேக பணிகளை மேற்கொள்ள அறநிலையத்துறை ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில் இந்தக் கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்ட நிலையில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களை அறங்காவலர் குழுவில் நியமிக்காமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதற்கு இந்த சமுதாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் இந்த சமுதாய மக்கள் ஒன்றிணைந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்த நிலையில்,நேற்று காலை முதல் கோவில் வளாகத்தில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பெண்கள் உட்பட சுமார் 600க்கும் மேற்பட்டோர் நேற்று இரவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை முதல் மீண்டும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
ஏற்கனவே இரண்டு சமுதாய மக்களிடையே மோதல் ஏற்பட்டதால் தான் இந்த கோவில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாக கூறும் தமிழக அரசு, தற்போது ஒரு தரப்பு மக்களை ஒதுக்கி வைத்து விட்டு அறங்காவலர் குழு அமைத்ததன் காரணமாக மோதல் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாகவும், அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து அறங்காவலர் குழு அமைத்து உரிய முறையில் கும்பாபிஷேகம் நடத்துவதுடன்,கோவில் திருவிழாக்களையும் கோவில் பராமரிப்பு பணிகளையும் முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
அதுவரை எங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ள பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு மூன்று நாட்களாக பொதுமக்கள் போராடிவரும் நிலையில் இதுவரை அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது …