எரிவாயு தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாக குற்றம்சாட்டி சென்னை சைதாப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் திமுக கூட்டணி கட்சியினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்தான் பதட்டத்தை உருவாக்குவதாக அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியா மட்டுமில்லை உலகநாடுகள் முழுவதும் இந்த பதற்ற நிலை உள்ளது. அண்ணாமலை அறியாமல் பேசுகிறார் என்றுதான் அர்த்தம். நாங்கள் அரசியல் செயயவில்லை. அண்ணாமலைதான் அரசியல் செய்கிறார் .
திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கிறது . அதிமுக – பாஜக இன்னும் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. 2021 கூட்டணியையே அவர்களால் தக்க வைக்க முடியவில்லை.
அதிமுக பாஜக , விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்க முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன . விஜய்க்கு அழுத்தம் கொடுத்து அடிபணிய வைக்க முயற்சிகள் நடப்பதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன நண்பர் விஜய் பாஜகவிற்கு அடிபணிந்தால் அவருடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும். பிற மாநிலங்களில் பாஜக , சங் பரிவார் நய வஞ்சகமாக கூட்டணி கட்சிகளை வளைப்பது , போன்ற யுத்தியை கையாள்வர் , அதை தமிழகத்திலும் செய்ய பார்க்கின்றனர். நண்பர் விஜய் அதற்கு இணங்க மாட்டார் , தனது எதிர்காலத்தை சூனியமாக்கி கொள்ள மாட்டார் என நான் நம்புகிறேன் என்றார்.
இடதுசாரிகள் கூடுதல் தொகுதிக்கள் கேட்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த திருமா, கூட்டணி பேச்சுவார்த்தையின்போது கூட்டணி கட்சிகள் இடையே மாறுபட்ட , முரண்பட்ட கருத்துகள் வருவது இயல்புதான் . ஆனாலும் இறுதியில் சுமூக தீர்வு காண்போம். இடதுசாரிகளின் கருத்துக்கால் கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என இரண்டொரு நாளில் தெரிந்து விடும் என்று குறிப்பிட்டார்.
