2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரப்பூர்வ குழுவை இன்று (மார்ச் 15) அமைத்துள்ளார். கூட்டணிக் கட்சிகளுடன் சுமூகமான முறையில் தொகுதிகளைப் பகிர்ந்து கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் அதிமுகவின் மூத்த தலைவர்களான கே.பி. முனுசாமி (அதிமுக துணைப் பொதுச்செயலாளர்), திண்டுக்கல் சீனிவாசன் (அதிமுக பொருளாளர்), எஸ்.பி. வேலுமணி (அதிமுக தலைமை நிலையச் செயலாளர்), வளர்மதி (அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர்) ஆகியோர் இடபெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் நாளை (மார்ச் 16) முதல் அதிமுக கூட்டணியில் உள்ள பிற கூட்டணிக் கட்சிகளுடன் தங்களின் முதற்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்க உள்ளனர். எந்தெந்தக் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் மற்றும் எந்தெந்தத் தொகுதிகள் என்பதில் இழுபறி இன்றி முடிவெடுக்க இக்குழுவுக்கு எடப்பாடி பழனிசாமி முழு அதிகாரம் வழங்கியுள்ளார்.
மறுபுறம், ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பணிகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில், காங்கிரஸ், மமக, கொமதேக, மதிமுக ஆகிய கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
