தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை.152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை நீர் திறக்கப்படுவது வழக்கம்.
அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் கடந்த சில மாதங்களாக அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைவாக காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் 110 அடி வரை குறைந்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து. அதனால் அணையின் நீர்மட்டம் கடந்த 10 நாட்களில் 16 அடி வரை உயர்ந்து, தற்போது அணையின் நீர்மட்டம் 130 அடியை எட்டி உள்ளது.
மேலும் அணைக்கு நீர்வரத்து இன்று (31.05.2025) காலை நிலவரப்படி வினாடிக்கு 6,125கன அடியாகவும், நீர் இருப்பு 4664.75 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மீண்டும் 142 அடி வரை உயர்த்தப்படும் என விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். அணையில் இருந்து தேனி மாவட்ட குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வந்த நிலையில், நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நேற்று முன்தினம் (29.05.2025) வினாடிக்கு 1,350 கனஅடி நீர் தமிழகப் பகுதிக்கு வெளியேற்றப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 1,400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை முல்லை பெரியாற்றின் கரையோரம் வசிக்கும் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு ஆட்சியில் எந்த நேரத்திலும் அதிக அளவு நீர் திறக்கப்படலாம் என்பதால், யாரும் பெரியாற்றின் பக்கம் செல்லக்கூடாது என எச்சரிக்கை பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 130 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரளா தொடர்ந்து போராடி வருகிறது. மேலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் மனுதாக்கல் செய்வதுடன், கேரளாவில் உள்ள பல்வேறு அமைப்புகளும் அணை பலவீனமாக உள்ளது, அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கேரளாவின் அழுத்தத்திற்கு பயந்து, தமிழக பொதுப்பணித்துறையினர் தேவைக்கு அதிகமான கூடுதல் நீரை தமிழக பகுதிக்கு திறந்து விட்டு கேரளாவின் கோரிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்களோ என்ற சந்தேகம் வலுவாக எழுந்து வருகிறது. பல்வேறு விவசாய அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் கம்பத்தில் உள்ள முல்லைப் பெரியாறு பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.