நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள். இவரின் மேடைப் பேச்சிற்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு என்றே கூறலாம். நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு அடுத்து இருக்கும் முக்கியமான நபர்களில் ஒருவராகப் பார்க்கப்பட்டவர் காளியம்மாள். அக்கட்சியின் சார்பில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர்களில் இவரும் ஒருவராக இருந்தவர். குறிப்பாக கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார்.
ஆனால், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் காளியம்மாளுக்கு இடையே பனிப்போர் நடந்து வந்தது. மேடையிலேயே காளியம்மாளை விமர்சிப்பது, அவர் பேச்சுக்கு பதிலடி கொடுப்பது என நாளடைவில் அவர்களின் பனிப்போர் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கிய நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகினார்.
அதன் பின்னர் அவர் பல்வேறு கட்சிகளில் இணையப்போவதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், எந்த முடிவையும் காளியம்மாள் வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில்தான் புதுத் தகவலாக, காளியம்மாள் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைய ஆலோசனை நடத்திவருவதாக கூறப்படுகிறது. இதனால் தான் வேல்முருகனுக்காக சென்னையில் நடந்த விழாவில் அவர் கலந்துகொண்டார் எனவும் அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றனர்.
