தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் களம் காண்பது மற்ற கட்சிகளிடையே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட வாய்ப்புள்ளதாக வெளியாகும் தகவல்கள், திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (CPM) திமுகவுக்கும் இடையிலான தொகுதிப் பங்கீட்டில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
திமுக – CPM இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தற்போது வரை இழுபறி நீடித்து வருகிறது. கடந்த காலங்களில் 2001, 2006 மற்றும் 2011 ஆகிய தேர்தல்களில் பெரம்பூர் தொகுதியில் CPM வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, அப்பகுதியின் தொழிலாளர் வர்க்க வாக்குகள் மற்றும் கட்சியின் பாரம்பரிய செல்வாக்கைச் சுட்டிக்காட்டி, பெரம்பூர் தொகுதியைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று CPM தரப்பில் திமுகவிடம் பிடிவாதமாக வலியுறுத்தப்பட்டு வருகிறதாம். “பெரம்பூர் எங்களின் கோட்டை” என்ற தர்க்கத்தை முன்வைத்து, சென்னையின் முக்கிய அடையாளமாக இந்தத் தொகுதியைப் பெற அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது.
மறுபுறம், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது அரசியல் வருகையை ஒரு வலிமையான அடையாளத்துடன் தொடங்க, வட சென்னையில் அதிக வாக்காளர்களைக் கொண்ட பெரம்பூர் தொகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஒருவேளை விஜய் இங்கு போட்டியிடுவது உறுதியானால், அவருக்கு எதிராக ஒரு வலிமையான இடதுசாரி வேட்பாளரை நிறுத்துவதன் மூலம், விஜய்யின் அரசியல் எழுச்சியைத் தடுக்க திமுக வியூகம் வகுக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதனால், விஜய்க்கு எதிராக CPM-ஐக் களமிறக்கும் நோக்கில் திமுக இந்தத் தொகுதியை ஒதுக்க முன்வருமா அல்லது தனது சொந்த வேட்பாளரையே நிறுத்துமா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.
