2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் நாளுக்கு நாள் பரபரப்படைந்து வரும் நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அதிரடி முடிவு எடுக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியபோது, தவாக கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை ஒதுக்க திமுக தலைமை தயக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது. அதாவது தவாக 3 தொகுதிகள் கேட்ட நிலையில், திமுகவோ ஒரு தொகுதிதான் தர முடியும் என்றும் அதிகும் உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க வேண்டும் எனவும் கறாராக கூறிவிட்டதாம். இந்த இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேல்முருகன் தரப்பு ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
இந்தச் சூழலில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அவசர உயர்மட்டக் குழு கூட்டம் இன்று (மார்ச் 15) சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறி அதிமுகவுடன் கைகோர்ப்பதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. அதிமுக தரப்பில் தவாக-வுக்குக் கௌரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளதால், இன்றைய கூட்டத்திற்குப் பிறகு வேல்முருகன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், வன்னியர் சமூக வாக்குகளைக் குறிவைத்து வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியையும் இணைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக, வடதமிழகத்தில் தவாக-வுக்கு இருக்கும் செல்வாக்கை கைப்பற்ற அதிமுக திட்டமிடுகிறது. ஒருவேளை தவாக வெளியேறினால், அது திமுக கூட்டணிக்கு வடமாவட்டங்களில் ஒரு பின்னடைவாக அமையலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
