மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளான இன்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் நகர்வுகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. சென்னையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் இருக்கும் ஜெயலலிதா சிலைக்கு ஆண்டுதோறும் மாலை அணிவித்து மரியாதை செய்வதை ஓபிஎஸ் வழக்கமாக வைத்திருந்தார். இந்த ஆண்டும் அங்கு மாலை அணிவிப்பதாக முதலில் அறிவித்திருந்த நிலையில், திடீரென அந்த முடிவை மாற்றி, தனது சொந்த தொகுதியான போடியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதாக அறிவித்துள்ளார்.

ஓபிஎஸ்-ஸின் இந்தத் திடீர் மாற்றத்திற்குப் பின்னால் பெரிய அரசியல் பின்னணி இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய ஓபிஎஸ், திமுக வரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகப் புகழ்ந்து பேசியிருந்தார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து அவர் விரைவில் திமுகவில் இணையக்கூடும் அல்லது அந்த அணியில் கூட்டணி சேரக்கூடும் என்ற தகவல்கள் கசிந்து வருகின்றன. இத்தகைய சூழலில், தனது அரசியல் குருவாகக் கருதும் ஜெயலலிதாவுக்குச் சென்னையில் முறைப்படி மரியாதை செலுத்துவதைத் தவிர்த்து, அமைதியாக போடியில் மரியாதை செலுத்துவது அந்த யூகங்களுக்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ‘தர்மயுத்தம்’ நடத்தி அதிமுகவில் தனது இருப்பைத் தக்கவைக்கப் போராடிய ஓபிஎஸ், தற்போது தனது வழக்கமான நடைமுறைகளைக் கைவிடுவது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்புடனான சட்டப் போராட்டங்களில் பின்னடைவைச் சந்தித்த நிலையில், தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தை அவர் திமுகவை நோக்கியே நகர்த்துகிறார் என்பதை இந்தச் செயல் உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஜெயலலிதா பிறந்தநாளிலேயே இந்த மாற்றம் நிகழ்ந்திருப்பது தமிழக அரசியலில் இன்று பேசுபொருளாகியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version