சமூக வலைதளங்களில் யாரையும் விட்டு வைக்காமல் விமர்சிக்கின்றனர் என்றும், உத்தரவுகளை பிறப்பித்ததற்காக நீதிபதிகளும் விமர்சிக்கப்படுகின்றனர் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
சமையல் கலை நிபுணரும், திரையுலக பிரமுகருமான மாதம்பட்டி ரங்கராஜ் அனைவராலும் அறியப்பட்டவர். அவரது பாரம்பரிய உணவுகள் பொதுமக்கள் மத்தியிலும், சமையல் ஆர்வலர்களுக்கு மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் இல்ல விழாக்களில் சமையல் செய்து பெரும் பிரபலமடைந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த மாதம்பட்டி ரங்கராஜ், ‘பென்குயின்’ படத்திலும் நடித்தார். தொடர்ந்து, சின்னத்திரையான விஜய் டி.வி.யில் வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்து கொண்டார். ஜாய் கிரிஸில்டாவும் ஏற்கனவே திருமணமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரும் திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தனர். மேலும், ஜாய் கிரிஸில்டா தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்ததோடு, அந்த புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா சென்னை போலீஸ் ஆணையரகத்தில் பரபரப்பு புகார் அளித்தார். மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றிவிட்டதாகவும், கோவிலில் வைத்து தன்னை திருமணம் செய்துகொண்டு, தன்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறார் என்றும் தனது புகாரில் தெரிவித்தார்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் டேக் செய்திருந்தார். இதனையடுத்து, ஜாய் கிரிஸில்டா சமூக வலைதளங்களில் அவதூறு பரப்ப, தடை விதிக்கக் கோரி சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி செந்தில் குமார், ‘சமூக வலைதளங்களில் யாரையும் விட்டு வைப்பதில்லை. உத்தரவுகளை பிறப்பிப்பதற்காக நீதிபதிகளையும் விமர்சிக்கின்றனர். தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்களை குறிப்பிட்டும், முந்தைய கால நிகழ்வுகளை குறிப்பிட்டும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றை பொருட்படுத்தாமல் புறக்கணிக்க வேண்டும்’ என தெரிவித்தார்.