2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் தேர்தல் வியூகங்கள் தீவிரமாகியுள்ளன. இந்நிலையில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி, மாநில அரசியலில் நுழையத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் கனிமொழி போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. திருச்செந்தூர் தொகுதி திமுகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, கடந்த ஆறு தேர்தல்களில் (துணைத் தேர்தல் உட்பட) அனிதா ராதாகிருஷ்ணன் இங்கு தொடர்ந்து வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது உடல்நிலை சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடப்போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அனிதா ராதாகிருஷ்ணனுக்குப் பிறகு அந்தத் தொகுதியைத் தக்கவைக்கவும், தென் மாவட்டங்களில் திமுகவின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தவும் கனிமொழி சரியான தேர்வாக இருப்பார் என்று தலைமை கருதுவதாகத் தெரிகிறது.
ஏற்கனவே தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கனிமொழிக்கு, அந்த மாவட்ட மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அவர் மாநில அரசியலுக்கு வரும் பட்சத்தில், தென் மாவட்டங்களில் கட்சியின் தேர்தல் பணிகளை ஒருங்கினைக்கவும், பெண்களின் வாக்குகளைப் பெருமளவில் கவரவும் முடியும் என திமுக மேலிடம் ஆலோசித்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் திமுகவின் குரலாக ஒலித்து வரும் கனிமொழி, மாநில அரசியலுக்கு வரும் பட்சத்தில் அவருக்கு அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல் தென் மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
