புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று (நவ. 24) காலை கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலக புகழ் பெற்றதாகும். இந்தாண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 3ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
இந்தநிலையில், அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று (நவ. 24) காலை கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக தொடங்கி உள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட 63 அடி உயரக் கொடி மரத்தில், மேள தாளங்கள் முழங்க, அர்ச்சர்கள் மந்திரங்கள் ஓத விழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
10 நாட்கள் நடைபெற உள்ள தீபத் திருவிழாவின் கடைசி நாளான டிசம்பர் 3ம் தேதி அதிகாலை கோயிலில் பரணி தீபமும், அதைத்தொடர்ந்து மாலையில் கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் கோயிலின் மலை உச்சயில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்த விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.
