ஜி20 உச்சி மாநாடு நிலையான வளர்ச்சியை உருவாக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக 3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி கடந்த 21ம் தேதி டெல்லியில் இருந்து தென்னாப்பிரிக்கா புறப்பட்டார். அந்நாட்டின் ஜோகன்னஸ்பர்க் விமானநிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், தென்னாப்பிரிக்க இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார்.
இதைத்தொடர்ந்து ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்தியா- பிரேசில்- தென்னாப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றினார். தென்னாப்ரிக்க அதிபர் சிறில் ராமபோசாவை நேற்று (நவ. 23) சந்தித்த பிரதமர் மோடி, வர்த்தகம், முதலீடு, அரிய வகை கனிமங்கள் இறக்குமதி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இத்தாலியின் ஜியோர்ஜியா மெலோனி, ஜப்பானின் சனே டகைச்சி மற்றும் கனடாவின் மார்க் கார்னி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இந்தநிலையில், தென்னாப்ரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று (நவ. 24) டெல்லி திரும்பினார். இந்த பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற ஜி20 மாநாடு வெற்றிகரமாக அமைந்ததாக தெரிவித்துள்ளார். இந்த மாநாடு நிலையான வளர்ச்சியை உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். உலகத் தலைவர்களுடனான சந்திப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஜி20 மாநாட்டில் நடைபெற்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் உடனான சந்திப்பு, இந்தியாவின் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜி20 உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக தென்னாப்ரிக்காவின் அற்புதமான மக்கள், அதிபர் சிறில் ராமபோசா மற்றும் தென்னாப்ரிக்கா அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
