தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப்ரல் 4) சென்னை வருகை தருகிறார். சென்னையில் தங்கியிருக்கும் பிரதமர், பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்டாயம் பங்கேற்க வேண்டும் என மேலிடத்திலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயரும் உள்ள நிலையில் இந்த கட்டாய அழைப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபத்தில் கேரள சட்டமன்றத் தேர்தலுக்காக பிரதமர் மோடி பாலக்கோடு பகுதிக்கு வருகை தந்தபோது, அங்கு நடைபெற்ற நிகழ்வுகளில் பங்கேற்க அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியது. இந்நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருப்பது, கட்சிக்குள் நிலவும் சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
தற்போது கோவையில் முகாமிட்டுள்ள அண்ணாமலை, அங்குள்ள தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார். டெல்லியிலிருந்து வந்த இந்தத் திடீர் அழைப்பைத் தொடர்ந்து, அவர் இன்று இரவு 8 மணி அளவில் விமானம் மூலம் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமருடனான இந்த சந்திப்பில், தமிழகத்தில் கூட்டணி நிலவரம் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
