டிட்வா புயல் கரையை கடக்கும் வரை பொதுமக்கள் யாரும் அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் இயங்கும் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”டிட்வா புயல் காரணமாக தற்போது நாகை, மயிலாடுதுறை பகுதியில் மழை பெய்து வருகிறது. புயல் சென்னை கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்ய உள்ளது. பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம்.
பொதுமக்கள் வெளியே வரவில்லையென்றால் இடர்பாடுகளை கொஞ்சம் களைய முடியும். டிட்வா புயல் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தவுடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் துரிதமாக எடுத்துள்ளார். அரசு உயரதிகாரிகள் மாவட்ட அதிகாரிகளை உடனே அறிவுறுத்தியதன் காரணமாக இதுவரை எந்தவிதமான உயிர்சேதமும் இல்லாமல் தவிர்த்துள்ளோம். 13 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு 1058 நபர்கள் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தங்கியுள்ளவர்களுக்கு உணவு, போர்வை உள்ளிட்ட தேவையான வசதிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
மருத்துவ உதவிகளும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தபடி அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். சென்னையில் இன்று இரவு முதல் நாளை மதியம் வரை மழை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளதால் மக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். கையிருப்பில் 5 லட்சம் 5 கிலோ அரிசி பைகள் நிவாரண தேவைக்காக தயார் நிலையில் வைத்துள்ளோம்.
இலங்கை விமான நிலையத்தில் சிக்கி உள்ள தமிழர்கள் முதல் நாள் சிரமப்பட்ட நிலையில் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி இலங்கை விமான நிலையத்தில் சிக்கி உள்ள 150 பேருக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தற்போது வரை புயலின் காரணமாக 16 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 24 குடிசைகள் சேதமடைந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை முழுவதுமாக நிரப்பி வைக்காமல் 80% அளவிற்கு தான் கொள்ளளவு வைத்திருக்கிறோம்.
அனைத்து மாவட்டங்களிலும் மாநில அவசர மையம் நிறுவப்பட்டுள்ளது. அதன் மூலம் புகார்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அதிகாரிகளும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.
