திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்று வரும் கோடை விழாவின் ஒரு பகுதியாக, கால்நடைத்துறை சார்பில் நடத்தப்பட்ட 24வது நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
பிரையண்ட் பூங்காவில் கடந்த மே 24 ஆம் தேதி மலர் கண்காட்சியுடன் துவங்கிய கோடை விழா, இந்த வருடம் 9 நாட்கள் நடைபெறுவதாக சுற்றுலாத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. கோடை விழாவில் தினந்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று 7வது நாள் கோடை விழாவில், கால்நடைத்துறை சார்பாக 24வது நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில், கோல்டன் ரிட்ரீவர், ஜெர்மன் செப்பர்டு, கிரேட் டேன், ராட்வீலர், டாபர்மேன், செயின்ட்பெர்னாட், ஹஸ்கி, ராஜபாளையம் உள்ளிட்ட 12 வகைகளைச் சேர்ந்த மொத்தம் 52 நாய்கள் கலந்துகொண்டன.
இந்த நாய்கள் கண்காட்சி 4 சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் நாய்களின் குணாதிசயங்கள், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல், பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படைகளில் சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டு, கால்நடைத்துறை சார்பில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அனைத்துப் பிரிவுகளிலும் (ஓவர் ஆல்) டாபர்மேன் நாய் முதல் பரிசைத் தட்டிச் சென்றது.
இன்று நடைபெற்ற நாய்கள் கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்ததுடன், நாய்களுடன் செல்ஃபியும் புகைப்படங்களும் எடுத்து மகிழ்ந்தனர்.