கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவை ஒட்டி நடைபெற்ற மிஸ் கூவாகம் போட்டியில் நெல்லையை சேர்ந்த ரேணுகா பட்டத்தை தட்டிச் சென்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் என்ற கிராமத்தில் உள்ளது கூத்தாண்டவர் கோயில். திருநங்கைகளின் குல தெய்வமாக கருத்தப்படும் இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இதில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர். அத்தோடு சித்திரைத் திருவிழாவை ஒட்டி திருநங்கைகளுக்காக பல்வேறு போட்டிகளும் நடைபெறும். அந்த வகையில்,

இந்தாண்டுக்கான கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 29-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கண் திறத்தல் நிகழ்ச்சி இன்று (13.05.2025) நடைபெற்றது. இதில் திருநங்கைகள் தங்களை புதுமணப் பெண் போல் அலங்கரித்துக் கொண்டு கோயிலுக்கு வருகை தந்தனர். பின்னர் அரவாண் சாமியை கணவராக பாவித்து கோயில் பூசாமி கையால் தாலி கட்டிக் கொண்டனர்.

திருநங்கைகளை மகிழ்விக்கும் வகையில் நேற்று முன்தினம் (11.05.2025) திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கூவாகம் திருவிழா மற்றும் ”மிஸ் திருநங்கை 2025” அழகிப் போட்டி நடைபெற்றது. அதன்படி நேற்று (12.05.2025) விழுப்புரத்தில் திருமண மண்டபம் ஒன்றில் தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து ”மிஸ் கூவாகம்” நிகழ்ச்சியை நடத்தியது.

இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, தர்மபுரி, நாமக்கல், தூத்துக்குடி, கோவை, ஈரோடு, பெங்களூரு, புதுச்சேரி உட்பட பல பகுதிகளை சேர்ந்த 40 திருநங்கைகள் கலந்து கொண்டு பல விதமான உடைகளில் மேடையில் ஒய்யார நடையிட்டனர். முதல் சுற்றில் 25 பேர் தேர்வாகி அடுத்த சுற்றுக்கு செல்ல, அவர்களில் இருந்து 15 பேர் இறுதிச் சுற்றுக்கு சென்றனர். தமிழ் கலாசாரம், நடை, உடை, பாவனை ஆகியவற்றின் அடிப்படையில் மொத்தம் 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களிடம் பொது அறிவுத்திறன் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. சிறந்த பதிலை அளித்த நெல்லையை சேர்ந்த ரேணுகா என்பவர் ”மிஸ் கூவாகம்-2025” டைட்டிலை தட்டிச் சென்றார். கள்ளக்குறிச்சியை சேர்ந்த அஞ்சனா 2-ம் இடத்தையும், கோவையை சேர்ந்த ஆஷ்மிகா 3-ம் இடத்தையும் பிடித்தனர். முதல் இடத்தை பிடித்த ரேணுகாவிற்கு கிரீடம் சூட்டப்பட்டு ரூ.50,000, இரண்டாம் இடம் பிடித்தவருக்கு ரூ.25,000, மூன்றாம் இடம் பிடித்தவருக்கு ரூ.11,000 பரிசாக வழங்கப்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version