தமிழகத்தில் கோடை காலத்தின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தாகத்தைத் தணிக்க இளநீர் மற்றும் பழச்சாறு கடைகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இந்த அதீத தேவையால், சந்தையில் எலுமிச்சை பழத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

நெல்லை போன்ற தென் மாவட்டச் சந்தைகளில் சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட எலுமிச்சை, தற்போது வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக 320 ரூபாயை எட்டியுள்ளது. வரத்து பல மடங்கு சரிந்துள்ளதால், சில்லறை விற்பனையில் ஒரு சிறிய எலுமிச்சையே 10 முதல் 15 ரூபாய் வரை விற்கப்படும் சூழல் நிலவுகிறது.

எலுமிச்சை மட்டுமல்லாது, கோடையின் இதர ‘தாகம் தீர்ப்பான்’களான இளநீர் மற்றும் தர்பூசணி விலையும் சாமானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் ஒரு இளநீரின் விலை அதன் அளவைப் பொறுத்து 70 முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

தர்பூசணி கிலோ 25 முதல் 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், குடும்பத்தோடு பழங்கள் வாங்கிச் சாப்பிட நினைப்பவர்கள் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெயிலின் கொடுமை ஒருபுறம் வாட்ட, மறுபுறம் எகிறும் இந்த விலையேற்றம் நடுத்தர மக்களின் பட்ஜெட்டை பதம் பார்த்து வருகிறது. உங்கள் பகுதியில் தர்பூசணி மற்றும் இளநீரின் விலை என்னவாக இருக்கிறது?

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version