நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே குடியிருப்புப் பகுதியில் பகல் நேரத்தில் மரத்தின் மேல் ஏறி நாய்களைத் தேடி சிறுத்தை நோட்டமிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக கரடி, காட்டெருமை மற்றும் சிறுத்தை போன்ற வனவிலங்குகள் உணவு தேடி நகர் மற்றும் கிராமப்புறங்களுக்குள் நுழைவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை வேட்டையாடுவதற்காக சிறுத்தைகள் ஊருக்குள் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

முன்பு இரவு நேரங்களில் மட்டும் நடமாடி வந்த சிறுத்தைகள், தற்போது பகல் நேரங்களிலும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள சோகத்துரை குடியிருப்பு பகுதியில், வீட்டின் அருகே இருந்த மரத்தின் மீது சிறுத்தை ஒன்று ஏறி அமர்ந்திருந்தது. அங்கிருந்தபடியே சுற்றிலும் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் எந்தப் பகுதியில் உள்ளன என நோட்டமிட்டது.

இதனை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தாலும், அந்தச் சிறுத்தையின் அசைவுகளைத் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. சிறுத்தை மனிதர்களைத் தாக்குவதற்கு முன்னதாக, வனத்துறையினர் உடனடியாக அந்தப் பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version