இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.50 கோடி வாடகை பாக்கியை நீண்ட நாட்களாக விடுவிக்காமல் இருந்து வந்தது. இந்த நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி, தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது. ஏற்கனவே சர்வதேசப் போர் பதற்றங்களால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் சூழலில், இந்த வேலைநிறுத்தம் நடந்தால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் சிலிண்டர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவியது.

இந்நிலையில், டேங்கர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஐ.ஓ.சி. நிர்வாகம், நிலுவையில் உள்ள ரூ.50 கோடி வாடகை பாக்கியை அடுத்த இரண்டு நாட்களுக்குள் விடுவிப்பதாக மின்னஞ்சல் மூலம் அதிகாரப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தது. ஐ.ஓ.சி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அளித்த இந்தத் திடீர் உத்தரவாதத்தை அடுத்து, திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகச் சங்கத் தலைவர் சுந்தர்ராஜன் அறிவித்துள்ளார். இதனால் தென் மாநிலங்களில் ஏற்படவிருந்த எரிவாயு தட்டுப்பாடு அபாயம் நீங்கி, நிலைமை சீராகியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version