திருவள்ளூர் அருகே குறைந்த மின்னழுத்தப் பிரச்சனைக்கு தீர்வு காணாத மின்வாரிய அதிகாரிகளைக் கண்டித்து, நடிகர் வடிவேலின் புகைப்படத்துடன் டிரான்ஸ்பார்மரில் வைக்கப்பட்ட நூதன பிளக்ஸ் பேனர் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கசவநல்லாத்தூர் தணிகாசலம் நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த நான்கு மாதங்களாகக் குறைந்த மின்னழுத்தப் பிரச்சனை நிலவி வருவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்துள்ளனர். இதனால் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த டிவி, பிரிட்ஜ், மின் விசிறிகள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருட்கள் பழுதடைந்துள்ளன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கடம்பத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகப் பதிலளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருவள்ளூர் – பேரம்பாக்கம் சாலையில் உள்ள கடம்பத்தூர் மின் டிரான்ஸ்பார்மரில் பிளக்ஸ் பேனர் ஒன்றைக் கட்டி வைத்துள்ளனர்.

அந்தப் பேனரில், நடிகர் வடிவேலின் புகைப்படத்துடன், “கலெக்டர் மேடம்… இது கரெக்டா மேடம்? லோ வோல்டேஜ் காரணமாக மின்சாதனப் பொருட்கள் பழுதடைந்துள்ளன; இதற்கு யார் பொறுப்பேற்பது? யார் இழப்பீடு தருவது? மௌனம் வேண்டாம், நடவடிக்கை வேண்டும்” என்ற அதிரடியான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

சாலையில் சென்றவர்கள் இந்த வித்தியாசமான பிளக்ஸ் பேனரைப் பார்த்துவிட்டுச் செல்வதுடன், சமூக வலைதளங்களிலும் இதைப் புகைப்படம் எடுத்துப் பகிர்ந்து வருகின்றனர். மின்வாரியத்தின் அலட்சியத்தைக் கண்டித்து இளைஞர்கள் கையாண்டுள்ள இந்த நூதனப் போராட்டம் திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version