திருப்பரங்குன்ற மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை டிசம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றத்தில் அமலில் இருந்த 144 தடை உத்தரவை ரத்து செய்து, மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து, விவகாரத்தின் நிலை குறித்து இன்று (டிச.5) நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த உத்தரவு படி நேற்று பாஜக மற்றும் இந்து அமைப்பினரை தீபம் ஏற்ற சென்றனர். ஆனால், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். தொடர்ந்து, தீபம் ஏற்ற சென்ற பாஜக மாநில தலைவர் உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், தீபம் விவகாரத்தின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பான வழக்கு, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணைக்கு இன்று வந்தது. விசாரணையில், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் ஆகியோர் ஆஜராகவில்லை. இதனையடுத்து, மனுதாரர் தரப்பில் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை என முறையீடு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவு ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை? என்பது தொடர்பாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாரை ஏன் அனுமதிக்கவில்லை ? என்பது குறித்து சிஐஎஸ்எப் கமாண்டன்ட் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதன் பின்னர் அரசு தரப்பில், “இந்த வழக்கு விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு கால அவகாசம் வேண்டும்” என முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கை வருகின்ற டிசம்பர் 9 ஆம் தேதிக்கு செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version