தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருவது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 27 தொகுதிகளில் நேரடியாகக் களம் கண்ட பாஜக, தற்போது கிடைத்துள்ள நிலவரங்களின்படி அனைத்து இடங்களிலும் பின்தங்கியே உள்ளது. குறிப்பாக, அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளிலேயே இந்த நிலை நீடிப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

சாத்தூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் ஆரம்பம் முதலே பின்னடைவைச் சந்தித்து வருகிறார். அதேபோல், தென்சென்னை தொகுதியில் களம் கண்ட முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களும் தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் சுற்று முடிவுகளில் மற்ற வேட்பாளர்களை விடக் குறைவான வாக்குகளே பெற்றுள்ளார். தமிழகத்தில் வேரூன்றப் பல கட்டப் போராட்டங்களையும் பிரசாரங்களையும் முன்னெடுத்த பாஜகவிற்கு, தற்போது வெளியாகி வரும் இந்த ஆரம்பகட்ட முன்னிலை நிலவரங்கள் பெரும் சவாலாகவே அமைந்துள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version