தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு. முருகானந்தம் அவர்கள் வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு பெண் ஊழியர்களுக்கு ஒரு முக்கிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஓராண்டு கால சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, இனி அவர்களின் தகுதிகாண் (Probation) பருவத்திலும் கணக்கில் கொள்ளப்படும்.
தற்போதுள்ள விதிகளின்படி, மகப்பேறு விடுப்புக் காலம் தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாததால், பெண் பணியாளர்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தால், அவர்களின் தகுதிகாண் பருவம் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இது அவர்களின் பதவி உயர்வையும், பணி மூப்பையும் பாதித்தது.
இந்தச் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, மகப்பேறு விடுப்புக் காலம், பெண் ஊழியர்கள் தகுதிகாண் பருவத்தில் இருந்தாலும் வழங்கப்படும்.
யாருக்கு இந்த சலுகை பொருந்தும்?
இந்தச் சலுகை, சிறப்பு மற்றும் தற்காலிக விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தகுதிகாண் பருவப் பணிக்காலம் 28.04.2025 அன்றுடன் நிறைவடையாதவர்களுக்கு மட்டுமே பொருந்தும். 28.04.2025-க்கு முன்பு தகுதிகாண் பருவம் முடிவடைந்தவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது.
இந்த அறிவிப்பு, அரசு பெண் ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.