திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை 26-வது கோடை விழா ஜமுனாமரத்தூரில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இந்த கோடைவிழாவில் தமிழ்நாடு பொதுத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி, அனைத்து துறை பணி விளக்க கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தனர் . அத்துடன் 65.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிவுற்ற திட்டப்பணிகளையும் திறந்து வைத்தனர் .
மேலும் விழாவில் ரூபாய் 111 கோடியே 25 லட்சம் மதிப்பில் 27532 பயனாளிகளுக்கு அரசின் நலதிட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.
இவ்விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசு பொறுப்பெற்றது முதல் பெண்கள், இளைஞர்கள், பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
போதை கலாச்சாரத்தை வேரோடு அழிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார். பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பெண்களின் கல்வியை மாநிலம் முழுவதும் கொண்டுசெல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர்,
‘பெண் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; பெண்கள் கல்வியே ஒரு சமூகத்தின் நிலையான வளர்ச்சிக்கு அடித்தளமாகும். எனவே, அதற்கு எதிரான குழந்தை திருமணம் போன்றவைகளை கைவிட வேண்டும்‘ என வலியுறுத்தினார்.
மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்குவதுடன், மக்களுக்கு தேவையான மருத்துவ, கல்வி போன்ற வசதிகளையும் ஏற்படுத்தப்படும் என்றார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க், போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

