நாகர்கோவில் இளைஞர் சிறைக் கொட்டடி மரணம் குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் தவெக ஐ.டி.விங் கடுமையான விமர்சனத்தை எடப்பாடி மீது வைத்துள்ளது.

இது தொடர்பாக எக்ஸ்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

கட்சியையே ஆட்சி அதிகாரப் பசிக்காக அடகு வைத்து, கைகளாலும் கால்களாலும் நடந்து தவழ்ந்து, பதவியை ருசித்தவர்கள், மனசாட்சி உள்ள மக்களாட்சிக்குப் பாடம் எடுப்பது, ‘சாத்தான் சத்தியம் பேசுவது போல’ இருக்கிறது.

மக்கள் தீர்ப்பை ஏற்க இயலாமல், இரவோடு இரவாக இருட்டிலே மறைந்து மறைந்து பதுங்கிப் பதுங்கிச் சென்று பேசி, திருட்டுத்தனமாக ஆட்சி அமைக்க முயன்று தோற்றவர்கள், தூய அரசியல் பற்றிப் பேசுவது ‘குற்றவாளியே தீர்ப்பு எழுதுவது போல’ இருக்கிறது.

சத்தியவான் இடர்பாடி ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் சம்பவத்தை மறந்துவிடுமா தமிழகம்? அப்படி இருக்கையில், எந்தக் குற்றம் என்றாலும் உடனடி நடவடிக்கையைத் துரிதப்படுத்தும், மக்கள் விரும்பும் ஆட்சி மீது களங்கம் சுமத்துவது, ‘ரத்தக் கறை படிந்த பற்களை மறைக்க முடியாமல் மறைத்துக்கொண்டு சிரிப்பது போல’ இருக்கிறது.

திரும்பத் திரும்பச் சொல்கிறோம். தீர்ந்துபோன சக்தி திருந்தும் வரையிலும் சொல்லுவோம். சினிமா வெற்றி பற்றியோ, சினிமா வெளிச்சம் பற்றியோ, சினிமா புகழ் பற்றியோ இழிவாகப் பேசும்போது, புரட்சித் தலைவரையும் ஜெயலலிதா அம்மையாரையும் தீர்ந்துபோன சக்தி வேண்டுமென்றே இழிவுபடுத்துவது போலத்தான் இருக்கிறது. அதில் மாற்றமே இல்லை. இது, எம்.ஜி.ஆரின் அப்பழுக்கற்ற தொண்டர்களே ஆழமாக உணர்ந்த ஒன்று. இடர்பாடிக்குப் புரியும் வகையில், பழமொழியாகச் சொல்ல வேண்டும் எனில் இது, ‘மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது போல’ இருக்கிறது.

லஞ்சமற்ற, ஊழலற்ற, நேரடியாக மக்களுடன் மக்களாகக் களமிறங்கிக் களமாடும், மக்கள் விரும்பும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரை, விஷக் காளான்கள் எல்லாம் விமர்சிப்பதை மக்கள் கவனித்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்குத் தக்க பதிலடியைச் சரியான தருணத்தில் தமிழக மக்களே தருவார்கள் என்பதை இடர்பாடி என்றும் மறந்துவிட வேண்டாம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version