கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு தேயிலைத் தோட்டபகுதிகளில் மீண்டும் மக்கள் வசிக்கும் பகுதியில் உலா வரும் படையப்பா யானை..

கடந்த இரண்டு மூன்று தினங்களாக மூணாறு அருகில் உள்ள மாட்டுப்பட்டி, குண்டலை, செண்டு வாரை, அருவி காடு தேயிலைத் தோட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் படையப்பா ஒற்றை யானையைகண்டு தேயிலைத் தோட்ட தொழிலாளிகள் பொதுமக்கள் அச்சம்.

அரிக்கொம்பன் யானைக்குப் பிறகு கேரளா இடுக்கி மாவட்டத்தின் செல்லப் பிள்ளையாக கருதப்பட்டாலும்,ஒற்றையாக சுற்றித் திரியும் யானையை கண்டு தேயிலை தோட்டத் தொழிலாளிகள் குடியிருப்பு வாசிகள் கலக்கம்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு சுற்றுப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்ட பகுதிகளில் மீண்டும் கேரள இடுக்கி மாவட்டத்தின் செல்லப்பிள்ளையாக கருதப்படும் படையப்பா யானையின் நடமாட்டம் தொடங்கியுள்ளது.

குறிப்பாக மாட்டுப்பட்டி அணை மற்றும் அருவிக்காடு பகுதிகளில் இரவு நேரங்களில் சுற்றி திரிந்து கொண்டிருந்த படையப்பா யானை தற்போது பகல் நேரங்களிலும் குண்டலை,செண்டுவாரை போன்ற பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட பகுதிகளில் சுதந்திரமாக சுற்றித் திரிகிறது.இதனால் அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட பணியாளர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அரிக்கொம்பன் யானையை தமிழகத்தில் உள்ள வனப் பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டதற்குப் பின்பு தற்போது நீண்ட தந்தங்களுடன் காண்போரை கதிகலங்க வைக்கும் வகையில் தோற்றமளிக்கும் படையப்பாவின் ராஜ்ஜியம் கேரளா மூணாறு சுற்றுப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக குண்டலை ரேஷன் கடை, மருத்துவமனை பகுதி அருகில் படையப்பா யானையின் நடமாட்டம் அதிகம் உள்ளதால், தோட்டப்பணிக்கு செல்பவர்கள் மற்றும் இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு சொல்பவர்கள் குறிப்பாக சுற்றுலா பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இப்பகுதியில் செல்ல வேண்டுமென்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றித்திரிந்தாலும் இதுவரை படையப்பா யானை பொது மக்களை தாக்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படையப்பா யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பி விடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது படையப்பா யானை சுற்றித் திரியும் வீடியோ மூணாறு வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version