தூய்மை பணியாளர்கள் போராட்டம் அறிவித்துள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ரிப்பன் மாளிகையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ராயபுரம் மற்றும் திரு.வி.க மண்டலங்களின் தூய்மை பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1ஆம் தேதி முதல் 13ம் தேதி வரை நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள், மாநகராட்சி மேயருடன் தூய்மை பணியாளர்கள் நடத்திய 8 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.
அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி நள்ளிரவு தூய்மை பணியாளர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்து, பிறகு விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் வீடு, காலை உணவு, சிறப்பு மருத்துவ சிகிச்சை, கல்விக் கட்டணம் உட்பட 6 புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் 5 மற்றும் 6ஆவது மண்டலத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் 71 நாட்களாக பணியில்லாமல் இருப்பதாக கூறி இன்று சென்னை ரிப்பன் மாளிகை முன்பு, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் போராட்டம் நடத்த இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அது மிகப்பெரிய பேசுபொருளானது. அதன் காரணமாக போராட்டம் பெரிய அளவில் நடைபெறக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியின் ஈடுபட்டு வருகின்றனர். மீறி போராட்டத்தில் ஈடுபட்டால், கைது செய்வதற்காக 10க்கும் மேற்பட்ட வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.