அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிவை செயல்படுத்தும் விதமாக பிணைக் கைதிகளை விடுவிக்கவும், போரை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளவும் ஹமாஸும், இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன.

முன்னதாக, 2023, நவம்பரில் முதல்முறையாக இருதரப்பும் தற்காலிக போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது. ஆனால், கடந்த மார்ச் மாதம் தற்காலிக போர்நிறுத்தத்தை மீறி காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தீவிரப்படுத்தியது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் போர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர அண்மையில் 20 அம்ச அமைதித் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்தார். இதை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புக்கொண்ட நிலையில், அந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக கடந்த 4 நாட்களாக இருதரப்பு பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய பாலஸ்தீன கைதிகளின் பட்டியலை ஹமாஸ் சமர்ப்பித்தது. இதற்குப் பதிலாக, 2023 அக்டோபர் தாக்குதலின்போது இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட சுமார் 20 பிணைக் கைதிகள் மற்றும் சுமார் 27 பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்க ஹமாஸ் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து டிரம்ப் வெளியிட்ட பதிவில், இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் விரைவில் காஸாவில் இருந்து தங்கள் நாட்டுப் படைகளை இஸ்ரேல் விலக்கிக் கொள்ளும். இது வலுவான, நீடித்த அமைதியை நிலைநாட்டுவதற்கான தொடக்கமாகும். அமைதி ஒப்பந்தத்தின்படி அனைவரும் நியாயமாக நடத்தப்படுவர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version