ஏன் இந்த தண்ணீர் திறப்பு நாடகம்?
தேனி,மதுரை,திண்டுக்கல், சிவகங்கை,ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தேவையான நீரை வழங்குவது முல்லைப் பெரியாறு அணை.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் கடந்த மூன்று மாதங்களாக அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று அணையின் நீர்மட்டம் 130 அடியை எட்டியது.
இந்த நிலையில் இன்று முதல் கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக பாசனத்திற்காக அடுத்த 120 நாட்களுக்கு வினாடிக்கு 200 கன அடி வீதமும்,தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி வீதமும் என 300 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி இன்று காலை தேக்கடி தலை மதகு பகுதியில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி நீரை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் திறந்து வைத்தார். ஏற்கனவே கடந்த மூன்று நாட்களாக அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி நீர் தேவை இல்லாமல் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 130 அடியை எட்டிய நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3056 கன அடியாக குறைந்துவிட்டது. அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபடவில்லை. கடந்த நான்கு தினங்களாக அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி நீரை திறந்து விடாமல் இருந்திருந்தால், அணையின் நீர்மட்டம் தற்போது 135 அடி வரை எட்டப்பட்டிருக்கும்.
கேரளாவின் அழுத்தத்திற்கு பயந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்துவிடாமல் தடுக்கும் முயற்சிகளில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாகவே அணையில் இருந்து வினாடிக்கு 1600 கன அடி நீரை தேவையில்லாமல் தமிழக பகுதிக்கு வெளியேற்றி வருகிறது. 1600 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித்துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் வினாடிக்கு 300 கன அடி நீர் திறந்து விட்டது போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்.அப்படியானால் எதற்காக வினாடிக்கு 1600 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என்பது குறித்து பொதுப்பணித்துறையினர் இதுவரை எந்த விளக்கமும் சொல்லவில்லை.
ஏற்கனவே வினாடிக்கு 1622 கன அடி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், வினாடிக்கு 300 கன அடி திறந்ததாக நாடகம் போடுவது யாருக்காக?.. தமிழக அரசு மற்றும் பொதுப்பணித்துறையின் தமிழகத்திற்கு எதிரான கேரள ஆதரவு போக்கால் விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்…