21 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலையாளி, எஸ்ஐஆர் பணி மூலமாக அடையாளம் காணப்பட்டு கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, எண்ணூர் பகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு தாஜூதீன் என்பவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக எண்ணூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கொலையாளியின் பெயர் தவிர எந்தவித அடையாளமும் தெரியாததால் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆவடி மாநகர காவல்துறை ஆணையாளர் சங்கர், ஆவடி சரகத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் கைது செய்யப்படாமல் இருக்கும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

காவல்துறை ஆணையாளர் உத்தரவை தொடர்ந்து, காவல் ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தாஜூதீன் கொலை வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்.

முதற்கட்டமாக, கொலையாளியின் பெயர் ராஜேந்திரன், அவருடைய தந்தை பெயர் பரமசிவம் மற்றும் கடலூரை சேர்ந்தவர் என்ற தகவலுடன் விசாரணை துவங்கியது. இந்நிலையில், சம்பவம் தொடர்பாக புகார் அளித்த எண்ணூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த மரியம் பீவி என்ற பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொலையாளிக்கு ராஜேந்திரன் என்ற பெயர் மட்டுமல்லாமல், ரஃபீக் என்ற பெயர் இருந்ததும், அவர் எண்ணூர் பகுதியில் ரசூல் பீவி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு தலைமறைவானதும் தெரிய வந்தது.

கொலையாளி குறித்து எந்த துப்பும் கிடைக்காத நிலையில், விசாரணை பாதையை மாற்றிய தனிப்படை போலீசார் ஏற்கனவே கிடைத்த தகவலை தொடர்ந்து கடலூருக்கு விரைந்தனர். தொடர்ந்து போலீசார் அங்குள்ள வாக்காளர்களின் விவரங்களில் கொலையாளியை தேடினர். அதில் 5 முதல் 6 நபர்களின் விபரங்கள் ஒத்துப்போன நிலையில் அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது கொலையாளியோடு ஒத்துப்போகாத நபர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், திட்டக்குடி பகுதியில் இருந்த ராஜேந்திரன் என்பவரோடு கொலையாளியின் விவரங்கள் ஒத்துப்போனது.

இதனை உறுதி செய்வதற்காக தனிப்படை போலீசார் எஸ்ஐஆர் படிவம் சரிபார்க்கும் பிஎல்ஓ அதிகாரிகள் போல மாறுவேடமிட்டு, ராஜேந்திரனின் வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது, அவருடைய புகைப்படத்தை கைப்பற்றினர். மேலும் அந்த நபர் வீட்டில் எப்போதும் தங்காமல், நாடோடியாக சாம்பிராணி புகை போடும் வேலை பார்த்து வந்ததும், மேலும் அவர் ஜெயங்கொண்டம், வேலூர், பெரம்பலூர் பகுதிகளில் வேலைபார்த்து விட்டு அங்குள்ள பேருந்து நிலையங்களில் தங்கி வந்ததும் தெரிய வந்தது.

உடனடியாக அந்த பகுதிகளில் இருந்த பேருந்து நிலையங்களில் 15 நாட்களாக தனிப்படை போலீசார் தங்கியிருந்து கொலையாளியை தேடி வந்தனர். ஆனால் அவரை குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், ராஜேந்திரன் குடும்பத்தினரின் செல்போன் எண்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜேந்திரன் தன்னுடைய மகனை செல்போனில் தொடர்பு கொண்டது தெரிய வந்தது. உடனடியாக அழைப்பு வந்த அந்த எண்ணை சோதனை செய்ததில், அந்த அழைப்பு பெங்களூருவில் இருந்து வந்தது தெரிய வந்தது. உடனடியாக பெங்களூருவுக்கு விரைந்த தனிப்படை போலீசார், அங்கிருந்த ராஜேந்திரனை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு ராஜேந்திரன் வாக்குமூலம் அளித்தார். அதில், கொலை செய்யப்பட்ட தாஜூதீனுக்கும், ராஜேந்திரனின் அண்ணனுக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக தட்டி கேட்க சென்ற ராஜேந்திரனை தாஜூதீன் திமராக பேசியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் தாஜூதீனின் கழுத்தை அறுத்துக்கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும், கொலை செய்யப்பட்ட தாஜூதீனின் உடலை வீட்டிலேயே போட்டுவிட்டு, சென்னை எண்ணூரில் இருந்து தலைமறைவான ராஜேந்திரன் ஊரு ஊராக சுற்றி சாம்பிராணி போடும் வேலை செய்து வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

இதனை அடுத்து ராஜேந்திரனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 21 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலையாளியை பிடித்த தனிப்படை போலீசாரை காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டினர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version