கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை வன பகுதியில் விடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், கெம்பனூர் பகுதிகளில் விவசாய பயிர்களை ரோலக்ஸ் காட்டு யானை சேதப்படுத்தி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி ரோலக்ஸ் காட்டு யானையினை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
ரோலக்ஸ் யானை பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் வரகளியார் முகாமில் மரக்கூண்டில் ஒரு மாதம் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு மந்திரி மட்டம் வனப் பகுதியில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி விடப்பட்டது. ஆனாலும் ரேடியோ சிக்னல் பொருத்தி ரோலக்ஸ் காட்டு யானை கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் மந்திரி மட்டம் பகுதியில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது வெங்கடேஷ் கூறுகையில், ”தொண்டாமுத்தூர் பகுதியில் அக்டோபர் 17 ஆம் தேதி யானை பிடிக்கப்பட்டு மரக்கூண்டில் வைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் பராமரிக்கப்பட்ட நிலையில் நவம்பர் 12ம் தேதி மந்திரிமட்டம் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
ரோலக்ஸ் காட்டு யானையை தினமும் ரேடியோ சிக்னல் வைத்து, நேரில் பார்த்து வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வந்தனர். யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. நேற்று காலை 11.45 மணிக்கு ரேடியோ சிக்னல் கிடைத்த நிலையில் யானை இருக்கும் பகுதியை வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வந்தனர்.
பிற்பகல் 2 மணி வரை யானை ஊழியர்களின் கண்காணிப்பில் இருந்தது. 2 மணி அளவில் அங்கிருந்த ஓடையின் அருகில் தண்ணீர் குடிக்க சென்றபோது வழுக்கி விழுந்தது. இதை பார்த்த வன ஊழியர்கள் உடனடியாக அங்கு செல்ல முடியாத நிலையில் அரை மணி நேரத்திற்கு பின்பு ரோலக்ஸ் யானையின் அருகில் சென்று பார்த்தபோது யானை இறந்து இருப்பது தெரிய வந்தது.
இதனால் யானையின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வனத்துறை ஊழியர்கள் எடுத்து அனுப்புவதற்கு தாமதமாகிவிட்டது. யானையின் இறப்பு குறித்து விசாரிக்க தனிக்குழுவை தலைமை வனப்பாதுகாவலர். இன்று (நவ.27) இந்த குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு யானைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இறக்கத்தில் வழுக்கி விழுந்து யானை உயிரிழந்துள்ளது. யானையின் வாயில் சாப்பிட்ட புல் உள்ளிட்டவை இருந்துள்ளது. அந்த பகுதி பெரிய அளவிலான சரிவு கிடையாது. சிறிய குன்றுகள் இருக்கும் இடம். ஆனால் அந்த பகுதி மண் வழுக்கும் தன்மை கொண்டதால் யானை வழுக்கி விழுந்து இறந்துள்ளது. யானைக்கு மயக்க மருத்து கொடுத்து 12 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதன் தாக்கம் இருக்க வாய்ப்பில்லை. கூடலூர் அருகே பிடிக்கப்பட்டு நெல்லை வனப்பகுதியில் உயிரிழந்த ராதாகிருஷ்ணன் யானை பாறையில் இருந்த புற்களை சாப்பிட சென்றபோது இடறி விழுந்து இறந்தது.
ரோலக்ஸ் காட்டு யானை விடுவிக்கபட்ட மந்திரிமட்டம் பகுதி நல்ல தண்ணீர், தீவனங்கள் அதிகம் இருக்கும் பகுதி. அந்நிய தாவரங்கள் எதுவும் இருக்காது. யானை கழுத்தில் அரை மணி நேரத்திற்கு ஒரு சிக்னல் கிடைக்கும் வகையில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு இருந்தது. ரோலக்ஸ் யானை நலமுடன் இருந்தது. உணவும் நல்ல முறையில் எடுத்துக்கொண்டு இருந்தது.
இதுவரை இடமாற்றம் செய்யப்பட்ட யானைகளில் 10 சதவீதம் மட்டுமே மாற்று இடங்களில் தங்கி இருக்கின்றன. மற்ற யானைகளை மீண்டும் மீண்டும் பிடிக்கும் சூழல் இருந்துள்ளது. 23 யானைகள் இதுவரை இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இது தொடர்பான சரியான தகவல்களை நாளை தெரிவிக்கின்றேன்.” என்று ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
இதற்கிடையே மானாம்பள்ளி வனப்பகுதியில் விடப்பட்ட ரோலக்ஸ் யானை கடந்த 10 நாட்களுக்கு மேலாக வனப்பகுதிக்குள் சுற்றி வரும் வீடியோக்கள் மற்றும் யானை சென்ற இடங்களை குறிக்கும் ஜிபிஎஸ் வரைபடங்களை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
