முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும், திமுக முக்கிய பிரமுகருமான செந்தில் பாலாஜிக்கு எதிரான டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2021-23 காலகட்டத்தில் சுமார் 45,000 டிரான்ஸ்பார்மர்களைக் கொள்முதல் செய்ததில், அரசுக்கு சுமார் ரூ.397 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியதாக அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே இந்த புகாரை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை, இதில் போதிய முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்திருந்த நிலையில், தற்போது நீதிமன்றம் அதனை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதி காரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. டிரான்ஸ்பார்மர் டெண்டர்களில் முறைகேடுகள் நடந்ததற்கான முதற்கட்ட ஆதாரங்கள் மற்றும் புகாரில் உள்ள தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, ஒரு சுதந்திரமான விசாரணை அமைப்பு மூலம் இந்த ஊழல் புகார் விசாரிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இதற்காக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் உள்ள அனைத்துக் கோப்புகளையும் இரண்டு வாரங்களுக்குள் சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், மாநில அரசு மற்றும் மின்சார வாரியம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே பண மோசடி வழக்கில் சிக்கியுள்ள செந்தில் பாலாஜிக்கு, இந்த புதிய சிபிஐ விசாரணை பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
