சென்னையின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் ரூ.350 கோடி மதிப்பீட்டில் சுமா்ர 4,375 ஏக்கர் பரப்பளவில் சென்னை கடற்கரை சாலையில் (ஈசிஆர் ரோடு) ஆறாவது நீர்த்தேக்கம் விரைவில் அமைய உள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய முக்கிய நீர்த்தேக்கமாக சத்தியமூர்த்தி சாகர் பூண்டி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, கண்ணன்கோட்டை ஏரி மற்றும் சோழவரம் ஏரிகள் உள்ளன. அதுமட்டுமின்றி, வீராணம் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் இருந்தும் சென்னைக்கு குழாய் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், கடல் நீரை குடிநீராகும் திட்டத்தின் மூலமும், சென்னையில் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இத்தனை குடிநீர் ஆதாரங்கள் இருந்தும் கூட, சென்னைக்கான குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படுகிறதா என்றால், நிச்சயம் இல்லை. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள்தொகையும், மக்கள்தொகைக்கு ஏற்ப சென்னை விரிவாகிக் கொண்டே செல்வதுமே இதற்கு முக்கிய காரணம். குறிப்பாக, கோடைக்காலங்களில் பல்வேறு பகுதிகள் போதுமான நீரின்றி மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். தற்போது அதிகரித்து வரும் மக்கள் தொகையால், குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால், புதிய நீர்த்தேக்கம் உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், பழைய மகாபலிபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் 4,375 ஏக்கர் அரசு நிலத்தில் ஆறாவது நீர்தேக்கமாக புதிய நீர் தேக்கம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, நீர்த்தேக்கம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த கோவளம் பகுதியில் ரூ.350 கோடி மதிப்பீட்டில் இந்த ஆறாவது நீர்த்தேக்கம் கட்டப்பட உள்ளது. இந்த நீர்த்தேக்கம் அமைய உள்ள இடத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆய்வு செய்வதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் வேறு ஒரு பணி இருந்ததால், வேறு தேதிக்கு இந்த ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது.
அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்த பிறகு இந்த பணி துவங்கப்படும். திருப்போரூர் தொகுதியில் ஏற்கனவே சிறுதாவூர் கொண்டாங்கி, தையூர் போன்ற பல ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீர், பக்கிங் கால்வாய் வழியாக கோவளம், முகத்துவாரம் சென்று கடலில் வீணாக கலக்கிறது. இவ்வாறு கடலில் வீணாக கலக்கும் உபநீரை தடுத்து, குடிநீராக மாற்றும் வகையில் இந்த ஆறாவது நீர்த்தேக்கம் அமைய உள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தையிலிருந்து கோகிலமேடு வரை சுமார் 34 கிலோ மீட்டருக்கு, 4,375 ஏக்கர் பரப்பில், 1.6 டிஎம்சி கொள்ளளவில் சென்னையின் 6-வது நீர்த்தேக்கம் ரூ.350 கோடியில் அமைய உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் வீதம், ஒன்பது மாதங்களுக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளது. இதனால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
