தேசிய புலனாய்வு முகமை (NIA) தமிழக அரபிக் கல்லூரிகளை குறிவைத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அநீதியானதாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்ப்பதாகக் கூறி, அரபி மதரஸாக்கள் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து, அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்வதாக என்ஐஏ மீது குற்றம்சாட்டப்படுகிறது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோவையைச் சேர்ந்த அரபிக் கல்லூரி முதல்வர் அகமது அலி, ஊழியர் ஜவஹர் சாதிக், சென்னை பாலவக்கத்தை சேர்ந்த ஷேக் தாவூத், திண்டுக்கல் பெரியகலையம்புத்தூரைச் சேர்ந்த ராஜா அப்துல்லா ஆகியோர் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்தாண்டு இதே வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் மதரஸாக்களை குறிவைத்து என்ஐஏ அநீதமான முறையில் செயல்படுவதாக விமர்சனங்கள் எழுகின்றன.
கைது செய்யப்பட்டவர்கள் கடந்த ஒரு வருடமாக என்ஐஏ விசாரணைக்கு ஒத்துழைத்து வந்ததாகத் தெரிகிறது. இருப்பினும், அவர்களை தேடப்படும் குற்றவாளிகளைப் போல பரபரப்பாக கைது செய்து, அவர்கள் பணிபுரியும் மென்பொருள் நிறுவனத்திலும் பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பது, என்ஐஏ-வின் நோக்கம் குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது.
என்ஐஏ-வின் சோதனைகளில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக ஆவணங்கள் கிடைத்ததாகவும், அதன் அடிப்படையில் கைதுகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் வெளிப்படையாக ஆவணங்களை வைத்திருப்பார்களா? பயிற்சி விவரங்களை ஆவணப்படுத்துவார்களா? இது என்ஐஏ-வின் நடவடிக்கைகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. இந்த நடவடிக்கைகள் தமிழகத்தை பயங்கரவாதத்தின் புகலிடமாக சித்தரிக்கவும், அரபி மதரஸாக்கள் மீது பயங்கரவாத ஆதரவு முத்திரை குத்தவும் மேற்கொள்ளப்படுவதாகத் தோன்றுகிறது.
தமிழகத்தில் என்ஐஏ மேற்கொண்ட வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டவை எத்தனை? அவற்றின் தற்போதைய நிலை என்ன? இவை குறித்து பொதுமக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், அப்பாவிகளை யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைத்து, சித்திரவதை செய்வதும், இஸ்லாமிய இளைஞர்கள் மீது பொது சமூகத்தில் அச்சத்தை விதைப்பதாகவுமே என்ஐஏவின் நடவடிக்கைகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
ஒரு புலனாய்வு அமைப்பு, திடமான ஆதாரங்களை சேகரித்து, ரகசியமாக செயல்பட்டு, குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தர வேண்டும். ஆனால், தமிழகத்தில் என்ஐஏ-வின் நடவடிக்கைகள் ஊடக விளம்பரத்துடன் பதற்றத்தை உருவாக்குவதாகவும், கைதுசெய்யப்பட்டவர்களை விசாரணையின்றி சிறையில் அடைப்பதாகவுமே உள்ளன.
எனவே, சட்டம் மற்றும் உண்மையின் அடிப்படையில், அதன் உருவாக்க நோக்கத்திற்கு இணங்க என்ஐஏ செயல்பட வேண்டும். அப்பாவிகளை குறிவைக்கும், அரசியல் அஜெண்டாக்களுக்கு உட்பட்ட அநீதியான நடவடிக்கைகளை கைவிட வேண்டும், தமிழக சிறுபான்மை இளைஞர்களை குறிவைக்கும் இவ்விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு நீதி கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.