திருவள்ளூரில் போலீசார் மீது கற்களை வீசிய வன்முறையில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களை போலீசார் சிறை பிடித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ஒப்பந்த அடிப்படையில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அமரேஷ் பிரசாத் என்பவர் வேலை செய்து வந்தார்.
கடந்த 1-ம் தேதி இரவு அமரேஷ் பிரசாத், தான் தங்கி இருந்த குடியிருப்பில் உள்ள மாடிக்கு சென்ற போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதற்காக தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்ற போது, போலீசாரை கற்களை வீசி வடமாநில தொழிலாளர்கள் தாக்கினர். உயிரிழந்த அமரேஷ் பிரசாத் குடும்பத்திற்கு இழப்பீடு கேட்டு குடியிருப்பு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
View this post on Instagram
வடமாநில தொழிலாளர்கள் தாக்குதல் நடத்தியதில் செங்குன்றம் துணை கமிஷனர் பாலாஜி உட்பட 10-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டினர். ரகளையில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், போலீசார் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக தாக்குதல் சம்பவம் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.