அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை சிறைபிடிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் பயணத்திற்கு தேர்வு செய்யும் ஒரு சேவை பேருந்து சேவை. ரயில் மற்றும் விமானங்களில் 2 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்தால் தான் பயணம் செய்ய முடியும். அப்படியிருக்க உடனடியாக மக்கள் பயணம் செய்ய தேர்வு செய்து பேருந்து சேவை தான். வார விடுமுறையாக இருக்கட்டும், அல்லது ஏதேனும் தொடர் விடுமுறையாக இருக்கட்டும், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
அரசுப் பேருந்துகளை தாண்டி ஆம்னி பேருந்துகளிலும் எப்போதும் கூட்டம் அதிகரித்து காணப்படும். இதனை பயன்படுத்தி பல ஆம்னி பேருந்துகள் அரசு விதித்துள்ள கட்டணத்தை தாண்டி பல மடங்கு உயர்த்தி வசூலில் ஈடுபடும். இது குறித்து பயணிகள் தொடர்ந்து புகார்கள் அளித்த வண்ணம் உள்ளனர். இது தொடர்பாக அரசு தரப்பிலும் பல நடவடிக்கைகள், எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது. இருப்பினும் ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளை நின்றபாடில்லை.
இந்த நிலையில், இது குறித்து போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தொடர் விடுமுறையை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ்கள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்களை கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதியின்றி இயங்கும் ஆம்னி பஸ்களை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை” எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.