உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டங்களை தற்போதைய பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்த அனுமதிக்கக் கோரி, தமிழக அரசின் மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசுத் திட்டங்களின் பெயர்களில் வாழும் ஆளுமைகளின் பெயர்கள் பயன்படுத்த அனுமதிக்க முடியாது எனவும், திட்டம் தொடர்பான விளம்பரங்களில் முன்னாள் முதல்வர், கட்சியின் கொள்கைத் தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி, தமிழக பொதுத்துறை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், மாநில முதல்வர், அரசியல் சாசன அதிகாரி என்பதால், அரசியல் ஆளுமை எனக் கருத முடியாது. முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்களை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற திட்டங்கள் துவங்கப்பட்டு விட்டதால், இரு திட்டங்களை தற்போதைய பெயரிலேயே தொடர அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவை எதிர்த்து திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு, ஆகஸ்ட் 6 ம் தேதி விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது என, சி.வி.சண்முகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு பின், தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு எடுக்கலாம் எனக் கூறி, விசாரணையை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதற்கிடையில், உயர்நீதிமன்ற தடையை மீறி, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை அரசு துவங்கியுள்ளதாகக் கூறி, அரசுக்கு எதிராக, சி.வி.சண்முகம் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கும், ஆகஸ்ட் 7 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version