பாலக்காடு ரயிலில் பயணம் செய்த பெண் மீது ரயிலின் படுக்கை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகலிவாக்கம் குமாரசாமி தெருவை சேர்ந்த 50 வயதான ஜோதி என்பவர், எழும்பூரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி சூர்யா மற்றும் மகனுடன் சென்டிரலில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் நேற்று முன்தினம் (11.05.2025) அன்று பயணம் செய்துள்ளார். அப்போது சூர்யா படுக்கை வசதி கொண்ட பெட்டியின் கீழ் இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த போது, தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே, சூர்யாவின் இருக்கைக்கு மேல் நடுப் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த நபர் கீழே இறங்கியுள்ளார்..
அப்போது எதிர்பாராத விதமாக சங்கிலி கழன்றதால், படுக்கை கீழே படுத்திருந்த சூர்யா மீது விழுந்ததில், சூர்யாவின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. ரயிலில் முதலுதவி சிகிச்சை பெட்டி இல்லாததால், ஆத்திரமடைந்த சூர்யாவின் கணவர் ஜோதி, ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மொரப்பூர் ரயில் நிலையத்தில் அவர்களை இறங்கக் கூறிய போது, ஆம்புலன்ஸ் வசதி கூட ஏற்பாடு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஜோதி, இரவு நேரத்தில் இங்கு இறங்க முடியாது எனக் கூறி சத்தமிட்டுள்ளார். பிறகு சேலம் ரயில் நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதியுடன் காயமடைந்த சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து விளக்கமளித்துள்ள தெற்கு ரயில்வே, சம்பவம் நடந்த பெட்டியில் ரயில்வே அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், மெக்கானிக்கல் தொடர்பான பிரச்னை இல்லை எனவும் கூறியுள்ளது. பயணிகள் நடுவில் உள்ள படுக்கை வசதியிலான இருக்கையின் சங்கிலியை இணைக்கும் கொக்கியை முறையற்ற முறையில் கையாண்டதாலேயே இந்த விபத்து ஏற்பட்ட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.