பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையத்திற்கு தங்கள் நிலங்களை வழங்க ஒப்புதல் தெரிவித்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதற்கான பத்திரப்பதிவு பணியினை தொடங்கி உள்ளனர்.
சென்னையின் 2வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மொத்தமாக பரந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம், பொருளாதார விவகாரங்களுக்கான துறை, விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்கு முறை ஆணையம், இந்திய வானிலை ஆய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் முதல் கட்ட ஒப்புதலை அளித்துள்ளன. தொடர்ந்து பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலங்களுக்கான விலையை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
மொத்தம் 3331.25 ஏக்கர் பரப்பிலான நிலங்களுக்கு, ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.2.57 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலையின்படி கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் அளவைப் பொறுத்து இழப்பீடு நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக 17.52 ஏக்கர் நிலம் ரூ.9.22 கோடி மதிப்பில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 17.52 ஏக்கர் நிலங்கள் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்காக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நிலம், பதிவு செய்த 4 மணி நேரத்திற்குள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பரந்தூர், பொடவூர், நெல்வாய், வளத்தூர், அக்கமாபுரத்தைச் சேர்ந்த கிராமங்களில் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை பத்திரப்பதிவு செய்து தந்துள்ளனர்.
பரந்தூர் விமான நிலைய பணிகளுக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் விவகாரத்தில் தலைமைச் செயலகம் வந்து போராட்டம் செய்வேன் என தவெக தலைவர் விஜய் கூறியிருந்த நிலையில், இப்போது கிராம மக்களே தங்கள் நிலங்களை கொடுத்து பத்திரப்பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.