மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த நிக்தா, என்பவர் தனது தாய் சிவகாமியுடன் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயிலுக்கு காரில் சென்றுள்ளார். கோயிலுக்கு சென்றதும், அங்கு காவலாளியாக பணியில் இருந்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞரிடம் காரை ஓரமாக நிறுத்துமாறு சாவியை கொடுத்துள்ளார்.
அவர், தனக்கு கார் ஓட்டத்தெரியாது எனக் கூறி வேறொருவரை வைத்து காரை ஓரமாக காரை நிறுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய நிக்தா, அஜித்திடம் இருந்து கார் சாவியை வாங்கி, வீடு புறப்பட தயாராகியுள்ளார்.
அப்போது காரில் இருந்த ஒன்பதரை சவரன் நகை காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது குறித்த நிக்தா காவலாளி அஜித்குமாரிடம் கேட்க, அவர் தனக்கு ஒன்றும் தெரியாது எனக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நிக்தா போலீசில் புகார் அளிக்க, இது தொடர்பாக மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் அங்கு சென்று அஜித்குமாரை விசாரணைக்காக ஒரு வேனில் அழைத்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மாலை 6 மணியளவில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறி சிவகங்கையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அஜித்தை அழைத்துச் சென்றுளனர். அங்கு பரிசோதனை செய்ததில், அஜித்குமார் ஏற்கனவே இறந்துவிட்டடதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் அஜித்குமாரின் உறவினர்களுக்கு தெரியவர, ஆத்திரமடைந்தவர்கள், திருப்புவனம் காவல்நிலையம் முன்பு திரண்டனர். அஜித்குமார் எங்கே எனக் கேட்டு போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உயர் அதிகாரிகள் அங்கு திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அந்த காவல்நிலையத்தில் பணியாற்றிய குற்றப்பிரிவு போலீசார் 6 பேரை பணியிடன் நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.