பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து தற்போதைய செயல் தலைவரான அன்புமணி, நாளை நீக்கப்பட உள்ளதாக சூசகமாக கூறியுள்ளார் கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ்.
பாமகவில் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கும் வேலையை கடந்த சில நாட்களாக ராமதாஸ் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி இதுவரை காலியாக இருந்த மாவட்டங்களில் புதிய மாவட்ட செயலாளர்களாக எஸ்.டி.கே. சேகர் (திருவள்ளூர் வடக்கு) பகவான் பழனி (திருவள்ளூர் கிழக்கு) ரஜினி (திருவள்ளூர் தெற்கு) பழனிசாமி (தென்சென்னை தெற்கு) மயிலை ஆறுமுகம் ( தென்சென்னை கிழக்கு) வி.எஸ். வெங்கடேஷ் (வேலூர் கிழக்கு), முருகன் (மதுரை புறநகர் தெற்கு) பாண்டி காமாட்சி என்ற பாரதி பாண்டியன் (மதுரை புறநகர்) சந்தானதாஸ் (ராமநாதபுரம் கிழக்கு) சிங்கராயன் (தென்காசி தெற்கு) திருமலைசாமி (தென்காசிவடக்கு) ஆகியோரை புதிய நிர்வாகிகளாக ராமதாஸ் நியமித்துள்ளார்.
கடந்த 16-ந்தேதி முதல் மருத்துவர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகிறார். அதன்படி இன்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
இந்நிலையில் பாமகவின் பொதுக்குழு எப்போது என்று ராமதாசிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். வியாழக்கிழமை பெரிய அறிவிப்பு வரும் என்று அவர் பதிலளித்துள்ளார். இதன்மூலம் பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்படக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே சென்னையில் போட்டி கூட்டத்தை நடத்தி வரும் அன்புமணி, தனது ஆதரவாளர்களுக்கு மறுநியமன கடிதங்களை வழங்கி வருகிறார். தேர்தல் ஆணையத்தின்படி தான்தான் பாமகவின் தலைவர் என்றும் அவர் கூறி வருகிறார்.
தந்தை – மகன் இடையிலான கருத்து மோதல், பாமக தொண்டர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
