தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிர்ச்சி திருப்பமாக வாக்கு எண்ணிக்கையில், தமிழக வெற்றிக்கழகம் (தவெக) 100-ஐ தாண்டி முன்னிலை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி அரசியல் சூழலை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது.
சமீபத்திய நிலவரப்படி, தமிழக வெற்றிக்கழகம் (தவெக) 104 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனை தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) 74 இடங்களிலும், திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) 56 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.முதல் முறையாக முழுமையான தேர்தலை சந்திக்கும் கட்சியாக இருந்தாலும், விஜய் தலைமையிலான தவெக இந்த அளவுக்கு முன்னிலை பெறுவது, தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியதற்கான அறிகுறி என பார்க்கப்படுகிறது.
மந்திர எண்’ நோக்கி தவெக
தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. தற்போது 104-ஐ தொட்டுள்ள தவெக, அந்த இலக்கை நோக்கி வேகமாக நகர்கிறது. இதே போக்கு தொடர்ந்தால், தவெக தனியாகவே ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அல்லது சிறிய கட்சிகள், சுயேச்சைகள் ஆதரவுடன் எளிதில் பெரும்பான்மை கிடைக்கும் என்பது அரசியல் கணிப்பாக மாறியுள்ளது.
பாரம்பரிய கட்சிகளுக்கு பின்னடைவு
திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய பாரம்பரிய கட்சிகள் இந்த தேர்தலில் எதிர்பாராத சவால்களை சந்தித்து வருகின்றன.
திமுக அமைச்சர்கள், அதிமுக முன்னணி தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.அமைச்சர்களின் கோட்டையாக கருதப்பட்ட தொகுதிகளிலும் திமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் திமுகவுக்கு ஏற்பட்ட பின்னடைவு அக்கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோன்று நகர்ப்புறம் மற்றும் இளைஞர் வாக்குகளில் ஏற்பட்ட மாற்றமும் தேர்தல் முடிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
விஜய் அலை
விஜய் மீது இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்பு இந்த தேர்தலில் வெளிப்படையாக தெரிகிறது. சமூக ஊடகங்களில் மிகப்பெரிய ஆதரவு, புதிய அரசியல் மொழி, மாற்றத்தை வலியுறுத்திய பிரசாரம் போன்ற அனைத்தும் ‘விஜய் அலை’ உருவாக காரணமாக இருந்ததாக கருதப்படுகிறது.
முதலமைச்சர் விஜய்
தவெக 118 என்ற இலக்கை எட்டுவதற்கு தற்போதைய நிலவரப்படி,இன்னும் 15 இடங்கள் தேவை. தற்போதைய நிலவரங்கள் முன்னிலை மட்டுமே. இறுதி முடிவுகள் வெளியாகும் வரை அரசியல் கணிப்புகள் மாறக்கூடும்.தவெக 118-ஐ கடக்குமா,கூட்டணி தேவைப்படுமா என்பது இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும்.
பாமக, காங்கிரஸ் ஆதரவு?
அப்படி கூட்டணி தேவைப்படும் பட்சத்தில் சிறிய கட்சிகளின் ஆதரவை, குறிப்பாக பாமக ஆதரவை நாடலாம். அந்த கட்சி தற்போதைய நிலவரப்படி 6 இடங்களில் அக்கடி முன்னிலை வகிக்கிறது. அன்புமணிக்கும் இது நல்ல வாய்ப்பு என்பதால், அவரும் அமைச்சரவையில் இடம் என்கிற பேரத்துடன் ஆதரவளிக்கலாம். இல்லையென்றால், கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ பதவி இழக்காத வகையில், அதிமுகவிலிருந்து 20 க்கும் அதிகமானோரை இழுக்க வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பாக ’கொங்கு பெல்ட்’டில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ-க்களைத் தூக்குவதற்கான பொறுப்பு செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றால், அந்த கட்சியும் ஆதரவளிக்க வாய்ப்பு உள்ளது.
எது எப்படியோ, ஒரு விஷயம் மட்டும் உறுதி —தமிழக அரசியலில் இன்று வரலாறு எழுதப்படுகிறது. விஜய் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் ஆகிறார்.
பதவி ஏற்பு எப்போது?
தனி மெஜாரிட்டி கிடைத்துவிட்டால், இந்த வாரம் வெள்ளிக்கிழமைக்குள் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை பதவி ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மெஜாரிட்டிக்கு சில இடங்கள் தேவைப்பட்டால், தேவையான ஆதரவு எம்.எல்.ஏ-கள் ஆதரவைப் பெறுவதற்கான கால அவகாசத்தைப் பொறுத்து அடுத்த வாரம் பதவி ஏற்பு இருக்கக்கூடும் எனத் தெரிகிறது.
