சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் இடையே மோதல் சம்பவம் தொடர்பான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2009-ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்கறிஞர்கள் சிலர் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். இந்த வழக்கில், தொடர்புடைய வழக்கறிஞர்களைக் கைது செய்தபோது, காவல்துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது.
கடந்த 2009-ம் ஆண்டு, பிப்.19-ம் தேதி நடந்த இந்த மோதலில் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, வழக்கறிஞர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 28 வழக்கறிஞர்களும், 4 காவல்துறை அதிகாரிகளும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
