சென்னை கோடம்பாக்கத்தில் 16-வயது சிறுவனின் வாயில் மதுவை உற்றி பாலியல் தொல்லை கொடுத்த காவலரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 16வது சிறுவன் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கோடை விடுமுறையை ஒட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு பெற்றோருடன் வந்துள்ளார். சிறுவன் குடும்பத்தோடு பெரியபாளையம் கோயிலுக்கு சென்று வந்துள்ளனர்.
பின்னர் சிறுவனின் பெற்றோர் இருவரும் சொந்த ஊருக்கு செல்ல, சிறுவன் மட்டும் உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். நேற்று இரவு சிறுவனின் உறவினர் வீட்டிற்கு, அவரது மாமாவின் நண்பரான வேலப்பன் என்பவர் வடபழனி காவல்நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வரும் நிலையில், அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது சிறுவனின் மாமவும், காவலரான வேலப்பனும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் போதை தலைக்கேற சிறுவனின் மாமா தூங்கியுள்ளார். இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் காவலர் வேலப்பன், திடீரென சிறுவன் இருந்த படுக்கை அறைக்குள் புகுந்தார்.
அங்கு டி.வி. பார்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதோடு, சிறுவனின் வாயில் மதுவையும் ஊற்றி சித்ரவதை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் அலறி கூச்சலிட்டப்படி, அருகிலிருந்த டி.வி ரிமோர்ட்டை எடுத்து காவலர் வேலப்பனை தாக்கி கீழே தள்ளிவிட்டார்.
பின்னர் அவரது பிடியில் இருந்து தப்பிய சிறுவன், கதவை வெளிப்பக்கமாக தாளிட்டு, அருகேயிருந்த காவல்நிலையத்திற்கு ஓடிச் சென்றுள்ளார். அங்கிருந்த காவலர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி அழ, சிறுவனின் மாமா வீட்டிற்கு சென்ற போலீசார், காவலர் வேலப்பனை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர் சிறுவனிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து காவலர் வேலப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஒரு சிறுவனை காவலரே பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
