தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த ‘இரு துருவ’ அரசியலின் ஒரு முக்கியப் பக்கம் இன்று மாறியுள்ளது. அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்தவருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இன்று காலை சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் அமைச்சர் சேகர்பாபுவுடன் ஓ.பன்னீர்செல்வம் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இதையடுத்து விடுதியிலிருந்து புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்-சேகர்பாபு இருவரும், நேராக அண்ணா அறிவாலயம் வந்தடைந்தனர். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, அவருக்குப் பொன்னாடை அணிவித்துத் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வின் போது திமுகவின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம் தனது போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தைச் சட்டப்பேரவைச் செயலாளரிடம் வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாகவே அவர் திமுக அமைச்சர் பி.கே. சேகர்பாபுவுடன் ஆலோசனை நடத்தி வந்ததும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களான வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஏற்கனவே திமுகவில் இணைந்ததும் இந்த நகர்வின் முன்னோட்டமாகப் பார்க்கப்பட்டது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒற்றைத் தலைமை உருவான பிறகு, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகும் அதிமுகவை மீட்க முடியாத சூழலிலும், பாஜக தலைமையிலான தேஜ கூட்டணியில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களாலும், ஓபிஎஸ் இந்த இறுதி முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்திருப்பது, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில், குறிப்பாக முக்குலத்தோர் சமூக வாக்கு வங்கியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. “அதிமுகவை வீழ்த்த வலிமையான சக்தியுடன் இணைவதே இப்போதைய தேவை” என ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
